140 ஏக்கர் காணி விகாரைக்காக அபகரிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்

இருதயபுரம் பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பிற்கு எதிராக, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் – இருதயபுரம் பகுதியில்,140 ஏக்கர் காணியை பௌத்த விகாரைக்காக அபகரிக்க முனையும் பௌத்த பிக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பகுதியில் உள்ள 140 ஏக்கர் காணியை, பௌத்த விகாரைக்காக கபளீகரம் செய்யும் முயற்சி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே, இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட மக்களால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரன் எம்பி தெரிவித்தார்.

அத்துடன், தமிழர் பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் தொடரும் அடாவடித்தனங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தமிழ் மக்களின் காணிகள் தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் இனவாதம் வெளிப்படுவதாக தெரிவித்தார்.

ஐ. நா. சபையிலும், மனித உரிமை பேரவையிலும், ஐரோப்பிய ஒன்றிய பிரநிதிகள் முன்னிலையிலும் தாங்கள் இனப்பாகுபாடு அற்றவர்கள் எனக் காட்டிக் கொண்டாலும் அதற்கு எதிர்மாறாகவும், மிக மோசமான செயற்பாடுகளிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

ஆகவே இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இருதயபுர பகுதியில் விகாரைக்காக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்துவதோடு, தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் வழிவகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில், பெருமளவு மக்களை ஒன்றுதிரட்டி கவனயீர்ப்பு போராட்டத்தில் தள்ளப்படுவோம் என எச்சரித்தார்.

ஒரு புறத்தில் தமிழர்களின் மூலாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இரசாயன உரங்களை நிறுத்தி, இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதாக கூறி, அதனை வேண்டும் என்றே திட்டமிட்டு செயற்படுத்தாமல் தவிர்க்கின்றனர்.

இந்திய மீனவர்களால், நம் மக்களின் கடற்தொழில் கோடிக் கணக்கில் பாதிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான அரசின் செயப்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டே அழிப்பவையாக நாம் நோக்குகின்றோம்.

மதத்தின் பெயரால் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால், பெருமளவு மக்களுடன் நாம் வீதிக்கு இறங்குவது உறுதி என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *