
இருப்பை தக்கவைத்துக்கொள்ள பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் – வியாழேந்திரன் தெரிவிப்பு!!
மட்டு.துஷாரா
-வர இருக்கின்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இவர்கள் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடைசியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தான் அவர்களது கட்சி சார்ந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். அதேபோல் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் சார்ந்தோரும் அதற்கான விளக்கத்தினை அளித்திருக்கின்றார்கள் அந்த வகையில் எனது விளக்கத்தையும் நான் வழங்க வேண்டிய கடைப்பாட்டில் இருக்கின்றேன்.
சாணக்கியன் அவர்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை உயரிய சபையான பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். என்னுடைய சகேதரர் சதாசிவம் மயூரனின் பெயரிலும் மண் அனுமதிப்பத்திரம் இருப்பதாக அவர் இதன்போது கூறி யிருக்கின்றார். அதேவேளை இதன்போது பசில் ராஜபக்ஷ அவர்களை விளித்தே அவர் இதனை பேசியிருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் என்ன உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ஷ அவர்களை விழித்து கூறியமைக்கான நோக்கம் என்ன? என்று பார்த்தால் சண்முகநாதன் மயூரனுக்கும் சதாசிவம் மயூரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பொய்யான தகவலை வழங்கியிருப்பது என்பது இவருடைய எதிர்கால அரசியலுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியும் காரணம் மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், ஏன் என்றால் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொன்னவர்களை கடந்த காலங்களில் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரிய பொய்யை சொல்லி ஒரு அரசியல் நடத்த வேண்டுமா? அதே போன்று பெருமாள் சந்திரகுமாரை பரமசிவம் சந்திரகுமார் ஆக்கியிருக்கின்றார்கள் இது ஒரு ஆரோக்கியமான அரசியலா? அதேவேளை நான் ஒரு பிழை விட்டால் நான் என்னை திருத்திக்கொள்வேன் பிழைகளை நியாயப்படுத்த நான் விரும்பமாட்டேன்.
எனது தம்பியின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை நான் கண்டிப்பேன். என்ட வீட்டில் வுறோணி எனும் நாய்க்குட்டி இருக்கின்றது அதனுடைய பெயரிலும் கூட மண் பேமிற் இல்ல ஆனால் சில வேளை அதுவும் பாராளுமன்றத்திற்கு வருமோ தெரியா? அதற்கும் ஒரு அப்பாவின் பெயரை வைத்து பேமிற் இருப்பதாக கூறுனாலும் கூறுவார்கள் ஏன் என்றால் அரசியலுக்காக ஆதாரமில்லாத கருத்தையே இவர்கள் கூறுவார்கள்.
இவர்களது பொய்யான கருத்துக்களை நாங்கள் மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். வர இருக்கின்ற பாராளுமன்ற அமர்வில் நான் அது தொடர்பான விளக்கத்தையளித்து அந்த விடையத்தை ஹன்சாட்டிலே இருந்து நீக்குமாறு சபாநாயகர் அவர்களை கோர இருக்கின்றேன்.இவர்கள் எதிர்வரும் தேர்தலுக்காகவே மக்கள் மத்தியில் பிழையான செய்திகளை கூறி மக்கள் மத்தியில் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அவர் கூறிய இலக்கத்தை கொண்ட மண் போர்மிட் இல் சண்முகநாதன் மயூரன் என்பவருக்கே மண் அனுமதிப்பத்திரம் இருக்கின்றது இதை புவிச்சரீரவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
சாணக்கியன் தமிழ் படிக்க வேண்டும் இவருக்கு சதாசிவத்திற்கும் சண்முகநாதனுக்கும் வித்தியாசம் விளங்கவில்லை. எமது மாணவர் ஒருவர் ஆரம்ப பிரிவு ஆசிரியராக இருக்கின்றார் இவர் வேண்டுமானால் அவரிடம் தமிழை கற்றுக்கொள்ளலாம்.


