தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் தீ விபத்து: 46பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது.

நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழாவது மற்றும் 11ஆவது மாடிக்கு இடையில், கட்டடத்தின் குடியிருப்பு பகுதியில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் முன்பு எச்சரித்தனர்.

தீயணைப்பு அதிகாரிகள் பின்னர் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளில் அல்லது அதைச் சுற்றி குப்பைகள் தேங்காமல் இருக்கவும், படிக்கட்டுகளை தடையின்றி வைத்திருக்கவும் வலியுறுத்தினார்கள்.

கட்டடத்தின் கீழ் பகுதியில் ஒரு காலத்தில் உணவகங்கள், கரோக்கி மதுபானசாலைகள் மற்றும் ஒரு சினிமா இருந்தது, ஆனால் இவை தற்போது பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

சுமார் 120 அடுக்குமாடி குடியிருப்புகளின் தொகுதியில் உள்ள பல குடியிருப்பாளர்கள் வயதானவர்கள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்கள் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *