பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதை எதிர்த்து கவனயீர்ப்பு பேரணி!

திருகோணமலை, மூதூர் 64 ஆம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்கு, பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மூதூர் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக ஆரம்பித்து, ஊர்வலமாக சென்று மூதூர் பிரதேச செயலகம் முன்றலில் நிறைவுற்றது.

அதனைத்தொடர்ந்து, காணி அபகரிப்பு தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையுடன் கிராம மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முழுமையாக கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும், எங்கள் காணிகளுக்குள் விவசாயம் செய்ய எங்களிடம் வாடகை கோறாதே, மூதூர் சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள, பௌத்த காலனியாக்குவதை உடன் நிறுத்து என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுள்;ளனர்.

எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்று காணி வேண்டாம் சொந்த நிலம் எமக்கு வேண்டும், காவல்துறையே அப்பாவி பொது மக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு துணை போகாதே, அதிகாரங்களையும் அதிகாரிகளையும் வைத்து மக்களை விரட்டாதே, மூதூர் முஸ்லிம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை நிறுத்துங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மூதூர் வாழ் மக்கள், இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *