முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தில் வாழும் வறிய குடும்பங்களின் காணிகளை அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி அடாத்தாக பிடித்து பயிர் செய்கை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்
குறித்த பகுதியில், 1979 மற்றும் 1983 காலப்பகுதிகளில் மலையகப் பகுதிகளிலிருந்து, ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரதேசத்தில் உள்ள எப்பன்டியா குளத்தில் உள்ள வயல் காணிகள் இம் மக்களுக்கு 1990 ஆம் ஆண்டு பகிர்ந்தளிக்கப்பட்டு காடுகளை துப்புரவு செய்து பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்தும், ஏற்பட்ட யுத்தம் காரணமாக அவற்றை கைவிட்ட நிலையில் மீளவும் குறித்த காணிகளில் பயிர்செய்கை மேற்கொண்ட வேளை, அயல் கிராம மக்களால் இக்காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டன.
இதுதொடர்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் மாகாண காணி திணைக்களம், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு மாகாண காணி திணைக்களத்தால் மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் உதவி காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, எப்பன்டியா குளம் கிராமத்தில் 1964 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட. காணிகள் தவிர்த்து மிகுதியாக உள்ள காணிகளுக்கு பிழையான தகவல்களின் அடிப்படையில் காணி பெற்றவர்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்து 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் அரை ஏக்கர் காணிகளை பிரித்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இத் தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாது, தற்போது இந்த காணிக்கான அரசியல்வாதிகளின் தலையீடுகளால் மலையகத்திலிருந்து பாதிக்கப்பட்டு கூலி வேலை செய்கின்ற மக்களின் வாழ்வாதார செய்ய பயன்படுத்தப்பட்ட காணிகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த காணிகளை ஆக்கிரமித்து இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





