எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும்; என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நாங்கள் செயற்படப்போவதில்லை. பாரத தேசத்தினுடைய உறவுகளை தொப்புள்கொடி உறவுகளாக, அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தரப்பாக நாங்கள் இந்த தேசத்தில் இருப்போம்.
எம்மைப் பொறுத்தவரை பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு. நாம் தந்தையர் நாடான பாரத தேசத்தை பின்பற்றி செயற்படுகின்றோம். அதாவது தாய் தமிழகம் என்பது எமது தொப்புள்கொடி உறவுகளாக உள்ளனர்.
தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும். ஆகவே, பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்களுடைய அரசியல் கலாசாரத்திலும் பாரத தேசத்தினுடைய அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகின்றோம்.
பாரத தேசத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின்பற்றுகின்றவர்களை, அங்கே நினைவு கூருவதை போல இங்கேயும் நினைவுகூரும் பண்பாட்டை பின்பற்றி வருகின்றோம்.
குறிப்பாக இன்று விஜயதசமி நாளில் அப்துல் கலாமினுடைய நினைவு தினத்தில் பாரத தேசத்திற்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். எமது நீண்டகால உரிமை கோரிக்கையை பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்.
நாம் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல, மற்றைய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையை கோரவில்லை. நாங்கள் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வளர்த்துக் கொள்ளவும் எமக்கு உரிமை வேண்டும். அதற்காக கடந்த 60 வருடங்களாகப் போராடி வருகின்றோம்.
அந்த வகையில், பாரத தேசம் எமது கோரிக்கையை நியாயமாக புரிந்து அதை அடைவதற்குத் தன்னுடைய முயற்சி, அழுத்தம், ஒத்துழைப்புக்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
பாரத தேசம் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். ஏற்கனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை பெற்றுத்தந்தது இந்த பாரத தேசமே அந்த நன்றிக் கடன் எமக்குள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





