சீனாவின் தயாரிப்பான கொரோனாத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி விரைவாகக் குறைந்துவிடும் என சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சினோபோர்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு விரைவாக மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவது அவசியம் எனவும் அந்த ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன.
தடுப்பூசி ஏற்றம் தொடர்பான விசேட ஆலோசனைக் குழுவும் இவ்வாறான கோரிக்கையை விடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 90 வீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபோர்ம் தடுப்பூசிகளே போடப்பட்ட நிலையில், இந்த ஆய்வுகள் குறித்து இலங்கை சுகாதாரத் தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தி வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை, இன்று அல்லது நாளை வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் 7.3 பில்லியன் கொரோனாவாக் மற்றும் சினோபோர்ம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் குறைந்த மற்றும் தடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் இந்தத் தடுப்பூசிகளே அதிகளவுக்குக் கைகொடுத்தன.
இந்நிலையிலேயே, இந்தத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களுக்கு விரைவாக நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், சீனாவின் தடுப்பூசிகள் மோசமானவை அல்ல. எனினும், மாற்றுத் தெரிவு உள்ளபோது அவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது என இந்தியாவின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.





