வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் நிர்மாணிக்கப்படவுள்ள 13 வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான முதலாம் கட்ட காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனகௌரி டினேஸ் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *