நீர்கொழும்பு, களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, ஒரு சில கடற்றொழில் அமைப்புகளும், பிரதேச மக்களும் களப்பிற்கு சொந்தமான, கண்டல் தாவரங்கள் வளர்க்கப்படாத ஒரு பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
அதேவேளை, அபிவிருத்தி திட்டத்தால் கடலுக்கும், களப்பிற்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமையால், களப்பு அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டுள்ளது.
மேலும், நீர்கொழும்பு களப்பு பிரதேசமாக வரத்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, கண்டல் தாவரங்கள் பரவி வியாபித்திருப்பதால் அப்பகுதிகளை வன பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கைளுக்கும் பயன்படுத்த முடியாது என அபிவிருத்தி திட்டத்திற்குப் பொறுப்பான பிரதம பொறியியலாளர் தெரிவித்தார்.
அத்துடன், கண்டல் தாவரங்களை அழிப்பதால் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும், நீர்கொழும்பு களப்பை சுற்றியுள்ள கண்டல் தாவரங்கள் வன பாதுகாப்பு திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அப்பகுதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாதெனவும், அதற்கு புறம்பாக ஏதேனும் வாய்ப்புக்கள் இருப்பின் அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அவதானம் செலுத்த முடியும் என்றும் வனவள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமெனவும், அதற்கு தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து கள விஜயமொன்றை மேற்கொண்டு, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமெனவும், அதனூடாக திட்டப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலளர் இந்து இரத்நாயக்க, நீர்கொழும்பு நகர மேயர் லன்ஸா, கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கம்பஹா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், நீர்கொழும்பு பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



