முறையற்ற வீதிப்புனரமைப்பினால் எமது மக்கள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ளவுள்ளனர் என வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காரைநகர்- யாழ்ப்பாண வழித்தட காப்பெற் இடும் புனரமைப்பு வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், வெள்ள வாய்க்கால்களை மூடி வீதிப்புனரமைப்பு பணிகள் தொடர்வதாக சபைக்கு மக்களால் முறைப்பாடு ஒன்று இடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளர் ஜெபனேசன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர்,
மானிப்பாய் – காரைநகர் வீதியில் 11ஆவது கிலோமீட்டருக்கு அண்மையில் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள நீண்ட வாய்க்கால்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வருடங்களாக பாரம்பரியமாக இருந்து கொண்டு வருகிறது.
வீதி அபிவிருத்தி என்ற பெயரில் ஒவ்வொரு கட்டங்கட்டமாக ஒவ்வொரு ஒப்பந்தகாரர்களுக்கு இந்த மானிப்பாய் வீதி இரண்டு கிலோமீட்டர் படி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்கள் தங்களுடைய நிதிகளை பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு தங்களுடைய நிதி ஏற்பாடுகளுக்கு ஏற்ற வகையிலே வேகமாக தங்களுடைய வீதிகளை முடிக்க வேண்டுமென்று, தனிய வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி செய்கிறார்களே ஒழிய எந்தவித பால கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை.
நூற்றாண்டு காலமாக பயன்படுத்த்ப்பட்ட வாய்க்கால்களை முழுமையாக மூடி மறைத்து அதன்மீது பாதை போடுகின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.
அதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் குறிப்பிட்டதைப்போல மத்திய வீதியில் இருந்து ஏழு மீட்டர் அகலிப்புக்களோடு வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உறுதி மொழி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையினர் முன்னிலையிலேயே அளிக்கப்பட்டிருந்தது.
இருந்த பொழுதிலும் 5மீட்டர் அகலம் ஆகத்தான் இந்த வீதியானது செப்பனிடப்பட்டு கொண்டுவருகின்றது. இதனூடாக பாரிய வெள்ள அனர்த்தம் இந்த வீதிகளிலே ஏற்பட இருக்கின்றது.
அதன் பிற்பாடு பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்கின்ற பொழுது இந்த வீதிகளையே தோண்டுகின்ற நிலமை ஏற்படுகின்றது.
இந்த வாய்க்கால்கள் இருந்த இடங்களில் எந்தவிதமான புனரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தனியே காப்பற் வீதியை மாத்திரம் கருத்தில் கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறதே ஒழிய முழுமையான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பான விளக்கம் நேரடியாக எங்களுக்குத் தரப்பட வேண்டும் இல்லாத சந்தர்ப்பத்தில் பொதுமக்களோடு பிரதேச சபை உறுப்பினர்களும் சேர்ந்து வீதி அபிவிருத்தி முழுமைப்படுத்துவதற்கான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்- என்றார்.


