மீனவர் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதுவரை மீனவ அமைப்புகளுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கொள்ளவிருக்கின்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இப்போராட்டம் அவரது தனிப்பட்ட நோக்கங்களுக்கானது. மீனவ போராட்டத்திற்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை.
பல்வேறு வடிவங்களில் அவர் போராட்டங்களை செய்யலாம். அது அவருடைய அரசியலுக்கானது. நாங்கள் எந்த அரசியல்வாதிகளையும் வெறுக்கவில்லை.
ஆனால், எங்களுடைய கடற்தொழில் சங்கங்கள் சார்ந்த பிரச்சினைகளை எங்களுடன் அணுகியே மேற்கொள்ள வேண்டும். எமது பிரச்சினை என்றால் எங்களோடு கலந்தாலோசித்தே மேற்கொள்ள வேண்டும்.
யாழில் 117 கடற்றொழிலாளர் சங்கங்கள், 11 சமாசங்கள் மற்றும் சம்மேளனம் என்பன இருக்கின்றபோதும் இந்த பிரச்சினை தொடர்பில் அவர் எங்களுடன் உரையாடவில்லை.
மேலும், மீனவர்களுடைய பிரச்சினையை ஒருபோதும் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். மீனவர் பிரச்சினையை மீனவர்களுடன் சேர்ந்தே மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


