கொவிட்-19 டெல்டா திரிபு இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்

உலகளாவிய ரீதியாக வேகமாக பரவி வரும் கொவிட்-19 டெல்டா திரிபுடன் 13 பேர் நாட்டின் ஐந்து இடங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

டெல்டா திரிபு தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நெக்ஸ்ட் ஸ்ரெய்ன் இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு, திருகோணமலை, காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் தெமட்டகொடை பகுதியில் தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் டெல்டா திரிபுடன் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அதில் தெமட்டகொடை பகுதியில் அடையாளங் காணப்பட்ட ஐந்து பேரும் அடங்குகின்றனர்.

இதனிடையே டெல்டா திரிபு வலுவடைந்துள்ளதால் பல உலக நாடுகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதானி டெட்ரோஸ் அதனோம் இதனை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது உருமாற்றம் அடைந்து வருவதால் அதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமியானது, தற்போது வரை பல்வேறு நாடுகளில் அல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

இதில் டெல்டா திரிபு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

டெல்டா திரிபானது சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோய் மிக ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

Leave a Reply