வடக்கு, கிழக்கு போராட்டங்களுக்கு மாவை தலைமை!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும், மறுதினமும் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே தலைமை தாங்கவுள்ளார்.

நேற்றுத் தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ‘சூம்’ வழியாக ஒன்றுகூடி ஆராய்ந்த சமயம் இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர்களான சி.வீ.கே.சிவஞானம் மற்றும் பொன். செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் சுமந்திரன் எம்.பியும் இந்தக் கலந்தாலோசனையில் பங்குபற்றினார்.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை வலியுறுத்தும் விதத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, காணி அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இத்தகைய போராட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்.

நாளையும் மறுதினமும் நடத்தப்பட இருக்கும் போராட்டங்களை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கீகரிக்கவில்லை என்று சாரப்பட இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தியை அவர் மறுத்தார்.

இந்தப் போராட்டத்தில் பங்களிப்பும் ஈடுபாடும் இருப்பதால்தான் தான் இந்தக் கூட்டத்தில் பிரசன்னமாகி இருக்கின்றார் எனவும் மாவை சேனாதிராஜா அங்கு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *