ஐ.பி.எல்.: நான்காவது முறையாக சம்பியனானது சென்னை சுப்பர் கிங்ஸ்!

ஐ.பி.எல். ரி-20 தொடரில், நான்காவது முறையாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 86 ஓட்டங்களையும் மொயின் அலி ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும் சிவம் மாவி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்னை அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெங்கடேஷ் ஐயர் 50 ஓட்டங்களையும் சுப்மான் கில் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டு பிளெஸிசும் தொடரின் நாயகனாக ஹர்சல் பட்டேலும் தெரிவு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *