மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவெள பிரதேசத்திலுள்ள வயற்காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் வண்டியில் அமர்ந்திருந்த சிறுவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9 இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

முரம் முறிந்து விழுந்ததில், காயமடைந்த சிறுவன் ஹொரவப்பொத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார் என்று ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயல் வெளியில் எரிந்த நிலையில் காணப்பட்ட மரமொன்றே இவ்வாறு முறிந்து சிறுவனின் தலையின் மீது விழுந்துள்ளது.

மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிரக்டர் வண்டியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டமையின் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் டிரக்டர் வண்டியை தரித்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது, மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாகவும், டிரக்டர் வண்டியும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *