விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட கப்பல் மீண்டும் உரத்துடன் இலங்கைக்கு புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கின்றது. நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமையே ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று இந்த நாட்டில் விவசாய மக்கள், பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு விவாசயத்தை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக, சிந்தித்து செயலாற்றாதமையின் காரணமாக விவசாயிகளுக்கு, இரசயான உரமும் இல்லாமல் போயுள்ளது. காபனிக் உரமும் இல்லாமல் போயுள்ளது.
நாடு சுதந்திரமடைந்தமையின் பின்னர் எமக்கு தேவையான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். எனினும், அந்த உற்பத்தி நூற்றுக்கு 40 சதவீதத்திலும் குறைவாகவே காணப்பட்டது. அதன் பின்பு நாம் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து அரிசியை கொண்டு வந்தோம்.
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் முன்னெடுத்த பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் காரணமாக, நீர்ப்பாசன அபிவிருத்திகள் காரணமாக, நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தது.
அந்த தலைவர்களும் விவசாயிகளும் வியர்வை சிந்தி ஏற்படுத்திய அரிசி உற்பத்தி தன்னிறைவு நிலைமையை, இல்லாமல் செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாட்டின் விவசாயிகள் மீது அரசாங்கத்தின் தலைவர்கள், கோபம், வெறுப்பில் உள்ளனரா என்று தெரியவில்லை. அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
சீனாவே எமது நாட்டில் தீர்மானங்களை எடுக்கின்றது. சீனாவிலிருந்து காபனிக் உரத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்தனர்.
இந்த நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தன்மையுடைய பக்டீறியாக்கள் அந்த உரத்தில் இருப்பதாக பரிசோதனையில் வெளியானது.
மரக்கறி செய்கை உள்ளிட்ட அனைத்து செய்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனித உடலில் காணப்படும் பக்டீறீயாக்கள் இதில் காணப்படுவதாக பரிசோதனையினூடாக தெரியவந்தது. கோலிபோர்ம் என்ற பக்டீறியாக்களே காணப்படுகின்றன.
சீனாவிலிருந்து உரத்துடன் வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், ஹிப்போஸ்பிரிஸ்ட் என்ற அந்த கப்பல் மீண்டும் புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கின்றது.
அந்த உரத்தில் ஒன்றும் இல்லை அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சீனா கூறுகின்றது.
எமது நாட்டை அரசாங்கம் ஒன்று ஆளவில்லை. வெளிநாடுகளுக்கு தேவையான வகையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றவகையில் இந்த உரங்களை கொண்டுவந்தால் இந்த நாட்டு மக்களினதும் விவசாயிகளினதும் வாழ்வாதாரம் பாதிப்படையும் என அவர் தெரிவித்துள்ளார்.





