ஜனாதிபதியின் அழைப்பு இன்னமும் வரவில்லை! – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்குரிய அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இன்னமும் வரவில்லை. அழைப்புக் கிடைத்தால் நேரடிப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசமைப்பு மற்றும் தமிழர்சார் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் எந்த நேரமும் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால், அந்தப் பேச்சுக்கான அழைப்பு அவரிடமிருந்து இன்னமும் வரவில்லை.

இந்நிலையில், இம்மாத இறுதியில் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி, அடுத்த மாத முற்குதியில் நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ அழைப்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து எமக்கு இதுவரை வரவில்லை. அப்படி ஒரு அழைப்பு வந்தால் வரவேற்கத்தக்கது.

சர்வதேசத்தின் மனதை ஜனாதிபதி வெல்ல வேண்டுமெனில் முதலில் நாட்டிலுள்ள தமிழர்களின் மனதை அவர் வெல்ல வேண்டும்.

தேசிய பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு ஊடாக நிரந்தரத் தீர்வை ஜனாதிபதி கொண்டுவந்தால்தான் இங்குள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை அவரால் வெல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *