கடல் வளத்தை கொள்ளையடிக்கும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்-யாழில் நாளை போராட்டம்..!

இலங்கை கடலுக்குள் எல்லை தாண்டி எமது கடல் வளத்தை கொள்ளையடிக்கும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள் என தெரிவித்து நாளைய தினம் இலங்கை தமிழ் மீனவர்கள் சார்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த 10 வருடங்களில் எமது  கடலில் இந்திய சட்டவிரோத  மீன்பிடியால் எமது தமிழ் மீனவர்கள் இழந்தது  870 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்   ($ 4 பில்லியன் USD) ஆனால் இங்கோ எமது மக்ககள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள் . இது தனியே வடக்கு மீனவர்களின் பிரச்சனை மட்டுமல்ல . இதனை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிரச்சனையாகவே நாம் பார்க்கிறோம்.எனவே நாம் பொறுத்தது போதும்.

வடக்கு  மாகாணத்தில் மன்னார் முள்ளிக்குளம் தொடக்கம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாக முல்லைத்தீவு  மற்றும்  கொக்கு தொடுவாய் வரையான 225 இற்கும் அதிகமான கடல் தொழில்  அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் – பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.

கடந்த  ஒரு தசாப்த காலமாக சட்டவிரோத இந்திய  படகுகளால் அத்துமீறி  அபகரிக்கப்பட்ட எமது  வளங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 3000 – 4000 பாரிய இந்திய சட்டவிரோத கடல் கலங்கள் 150 – 200  நாட்கள்  வருடத்தில்  சுரண்டும் மீன் வளத்தை பற்றி  நாங்கள்  சிந்திக்காமல் இருக்க  முடியுமா?  குறைந்தது  ஒவ்வொரு இந்திய பாரிய படகுகளும் 150,000 ரூபாய்க்கும் அதிக  பெறுமதியான கடல்  வளத்தை  ஒரு தடவையில் அள்ளி  செல்கின்றன. 

2010 இல் ஆரம்பித்த எல்லைதாண்டும்  இந்திய மீனவர் பிரச்சனைக்காக , நெருக்கடிக்கு தீர்வாக 2012 – 2015 வரையில்  நான்  மன்னார் முள்ளிக்குளம் தொடக்கம் முல்லைத்தீவின் கொக்கிளாய் வரை சகல கடல்தொழில் அமைப்புக்களையும் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் போராட்டத்திற்கு நாம் அழைத்திருந்தோம்  . அவ்வேளையில் நாம் ஒற்றுமையாக போராடினோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வந்தபோது கூட நாம் இதற்காக குரல் கொடுத்தோம்.  ஆனால்  தற்போது நிலைமையானது கைமீறி போயுள்ளது. எனவே இதனை  நாம் கட்டுபடுத்தியே ஆகவேண்டும்.

நேரடியாக  பார்த்தால் 2010 – 2021 வரையான ஒரு தசாப்த  காலமாக  87,000 கோடி ரூபாய்   பெறுமதியான கடல் வளத்தை கடல்தொழிலாளிகளான எமது மக்கள் இழந்துள்ளார்கள் இது எமது தமிழ் மக்களுடைய சொத்து இல்லையா? மேலும் பல ஆயிரம் கோடி எதிர்கால சந்ததிக்கான கடல்வளமும் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய படகுகளால் அழிக்கப்பட்டு விட்டது.

கடலிலே மீன் வளம் மட்டுமா அற்று போகிறது. கடலில்  முருகைக்கல், பாசிகள் உட்பட பெறுமதியான எல்லா வளங்களும் இந்திய. எல்லை தாண்டிய மீன்பிடியால் சூறையாடி அழிக்கப்படுகின்றது. மீன்வளம்,  கடல்சார் சுற்றுச்சூழல் வளம் மட்டுமல்ல எமதுகடல் தொழிலாளர்களின் கடல் தொழில் உபகரணங்கள் ,கடல்கலம் மட்டுமல்ல கடல்தொழிலாளிகளின் உயிருக்கும் எமனாக இந்த எல்லை தாண்டிய மீன்பிடி முறைகள் அமைந்து வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த சில மீனவர்கள் எல்லைதாண்டும் மீனவர்களால் உயிராபத்து அச்சுறுத்தலை சந்தித்து உயிருக்கு போராடி பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உடைமைகளை இழந்து கரைமீண்டனர்.

வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை, தீவகம் மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு என்று பாதிப்புக்களின் பட்டியல் மிக நீண்டதாகும்.கடந்த 08.08.2021  கடல்  தொழில் அமைச்சர்  கௌரவ டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாட்டை தெரிவித்தநெடுந்தீவு மீனவர் சங்க தலைவர் ஒருவர்  தனக்கும் தன்னை சார்ந்த கடற்தொழிலாளர்களுக்கும் 4 கோடிக்கு  மேல்  வளங்கள்  இழப்பு  ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எனக்கு  தெரிந்த  பல கடற்தொழிலாளர்கள்  இந்த கடல்  தொழிலில் தொடர்ந்து  நட்டமடைய முடியாது  என்று  கருதி வேறு  தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.  இதற்கு நாம் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.இது தவிர வடக்கில் நடைபெறும், தமிழ் இளையோரை கலாச்சார சீரழிவுக்கு உள்ளாக்கும் போதைப்பொருள் வர்த்தத்தின் ஆதார மையமாக மீனவர் என்ற போர்வையில் எல்லைதாண்டும் இந்திய கடல்கலங்களே விளங்குகின்றன.

அடிக்கடி கடலூடாக நிகழும் போதை பொருள் வாணிபத்துக்கும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதை கடந்த கால சம்பவங்கள் பலவும் ஆதாரப்படுத்தியுள்ளன.இந்த உண்மையை மதுரை உயர்நீதிமன்றில் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இந்திய கடல்படையின் தென்பிராந்திய தளபதி சுட்டிக்காட்டியதையும் சகலருக்கும் நினைவூட்டுகிறேன்.

இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறிய  இலங்கை மீன்பிடி கடற்கலம்  ஒன்றுக்கு சின்னஞ்சிறு  நாடான ஷெசல்ஸ் நாட்டில்  3.4 கோடி இலங்கை ரூபாய் பெறுமதியான தண்டப்பணம் அறவிட்டுள்ளதுடன்,அவரது கடல்கலம் மற்றும் உபகரணங்களும் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டடன. இந்த உதாரணம் அனைத்திற்கும் பொதுவானதே.எனவே   எமது  வளத்தை  காக்க போராடுவோம். எல்லைதாண்டும் இந்திய கடற்கலங்கள் சுரண்டுவது அப்பாவி வடக்கு மீனவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர்களின் வளங்களையேயாகும்.

இனியும் பொறுக்க முடியாது.எமது இந்த போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் ஒத்துழைப்பும் தேவை. தமிழக அரசியல்வாதிகள் எமது நியாயமான ஆதங்கத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே  கடல்  தொழிலாளர் மட்டுமல்ல இயற்கையை நேசிக்கும் அனைவரும்  கட்சி வேறுபாடு இல்லாமல்  அணி திரளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புக்கள் அனைவரும் இந்த சமூக நீதிக்கான போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு  தெரிந்த  பல கடற்தொழிலாளர்கள்  இந்த கடல்  தொழிலில் தொடர்ந்து  நட்டமடைய முடியாது  என்று  கருதி வேறு  தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.  இதற்கு நாம் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.

அனைவரின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறேன். இந்தப்பிரச்சனைக்கு எமது மீனவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தீர்வு கிடைக்கும்வரை ஓயாத அலையாக இதை விட தீவிரமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *