
மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியில் போட்டியிடுவதா? என்பதை எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன். கட்சியின் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வெற்றிப்பெறும் திட்டங்களை செயற்படுத்துவது குறித்து கட்சியின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடியுள்ளோம். மாகாண சபை தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது பிரதானமாக காணப்படுகிறது என்றார்.
மேலும், பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் ஏழ்மை உருவாகியுள்ளதுடன், இப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது.
எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நீண்டகாலத்தை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் மாறும் போது அபிவிருத்தி கொள்கைகள் மாற்றமடைந்தால் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவரையில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது” என்றார்.

