எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அரசாங்கம்

இணைய அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு ஒவ்வாத எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வெளியகப்பொறிமுறை குறித்து தாம் தொடர்ந்தும் எதிர்ப்பையே வெளிப்படுத்துவோம் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 13 வருடகாலமாகத் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையை உருவாக்கி, நாடாளுமன்றில் நிரைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *