கனடா செல்வதற்கு கேரளாவில் தங்கியிருந்தவர்கள் கைது

கேரளா, செப் 6

படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாக கூறப்படும்  இலங்கையர்கள் 11 பேரை கேரள பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகத்துக்கு வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல்போயிருந்தனர்.

க்யூ பிரிவினர் (சிஐடியின் ஒரு பிரிவு) அவர்களின் தொலைபேசி சமிக்ஞைகளைப் பின்பற்றி விசாரணைகளை முன்னெடுத்ததில், தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போயிருந்த இருவர் உட்பட 11 பேரை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஏனைய ஒன்பது பேரும், தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள ஏதிலிகள் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தலா 2.5 லட்சம் ரூபாவை கொழும்பில் உள்ள முகவர் ஒருவரிடம் வழங்கி, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து படகு மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்களை தேடி கியூ பிரிவினர் தமிழகத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *