ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் ஜப்பான் அரசால் வழங்கப்பட்டன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கிய ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

ஜப்பானால் வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளின் (700,000 க்கும் மேற்பட்ட) முதல் தொகுதியை பெற்றுக் கொண்டதன் பின்னர், கடந்த சனிக்கிழமை (31/07) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விஷேட கருத்துக்களைத் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோயிலிருந்து இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளைக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜப்பான் பிரதமருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர அவர்களும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா அவர்களும் இலங்கையில் உள்ள யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதில் பணியாற்றினர். இந்த முயற்சிக்கு ஜப்பானின் தலைமை சங்க நாயக்க தேரர் வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ அவர்களும் உதவினார்.  முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள நாட்டில் உள்ள 490,000 பேருக்கு அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்காக இந்தத் தொகுதி தடுப்பூசிகள் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஜப்பானின் நரிடா விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 455 இன் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தத் தடுப்பூசிகளை, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா, சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஏனைய பிரமுகர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பெற்றுக்கொண்டார்.

தகவல் திணைக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *