அபிவிருத்தி திட்டங்களில் புறக்கணிக்கப்படும் தமிழ் பிரதேசங்கள்- கலையரசன் ஆதங்கம்!

“அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அபிவிருத்தி ரீதியிலான திட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். நாட்டில் எந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 “அம்பாறை மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்சினையாகவே தொடர்கின்றது.

அலிகம்பை, கண்ணகி கிராமம் ஆகிய இடங்களில் வாழும் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தூய்மையான குடிதண்ணீரை விநியோகிப்பதற்கான திட்டம் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அந்த அபிவிருத்தித் திட்டம்  முழுமை பெறவும் இல்லை.

அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அபிவிருத்தி ரீதியிலான திட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அபிவிருத்திப் பணிகள் மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள நீர்த் தாங்கி புனரமைப்பு தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பும் போது நிதியில்லை என்ற பதில் மாத்திரமே வழங்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

குடிதண்ணீர் தொடர்பான பிரச்சினையை முன்வைக்கையில் இன ரீதியிலான கருத்துக்களை நான் முன்வைக்கவில்லை. முன்னாள் நீர்வழங்கல்  அமைச்சரின் நிர்வாக கட்டமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே சுட்டிக்காட்டினேன்.

அலிகம்பை மற்றும் கண்ணகி கிராமம் ஆகிய இடங்களில் 70 சதவீதம் தமிழர்களும், 30 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள். இருப்பினும் இவ்விரு பகுதியிலும் குடிதண்ணீர் திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை. ஆனால், தமிழர் குறைவாக வாழும் பகுதிகளில் குடிதண்ணீர் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நூறு சதவீதமளவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றது. ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை  எடுப்பது அவசியம்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *