1970ஆம் ஆண்டுகளின் பின்னர், பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் நிதியமைச்சர்களா பதவிக்கு வரவில்லை எனவும், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின், பொருளாதாரம் குறித்து அறிந்தவர்களை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சியில் அமர்வதால், பிரச்சினை தீராது. எதிர்க்கட்சி வரிசைக்கு சென்ற பின்னர், அங்கிருந்தவாறு அரசாங்கத்தை விமர்சிக்க மாத்திரமே முடியும்.
இதனை விடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒன்றாக இணைந்து நிலையான வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை மீட்பது கடினம்.
மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டுமாயின் சகல கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து, 20 ஆண்டுகளுக்கான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். 1970 ஆம் ஆண்டு முன்னரே எமது நாட்டில் பொருளாதார நிபுணத்துவம் கொண்ட நிதியமைச்சர்கள் இருந்தனர்.
அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ரொனி டி மெல்லுக்கு (பொருளாதாரம் குறித்த சிறந்த அனுபவம் இருந்தது. அதன் பின்னர் நிதியமைச்சராக பதவிக்கு வந்தவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான நிபுணத்துவம் இருக்கவில்லை.
ஜனாதிபதிகளுக்கு நிதியமைச்சு பதவியை வழங்கியதே முதல் தவறு. இவர்களிடம் எந்த வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. பொருளாதாரம் பற்றியும் இவர்களுக்கு எதுவும் தெரியாது.
தன் பின்னர் நிதியமைச்சராக பதவிக்கு வந்தவர்களுக்கும் பொருளாதாரம் பற்றிய எவ்வித அறிவும் இருக்கவில்லை. அத்துடன் நிதியமைச்சின் செயலாளர்களாக பதவி வகித்தவர்களும் பல வருடங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் கீழ் சுமார் மூன்று தசாப்தங்கள் நாட்டின் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டுள்ளது. அவரது பொருளாதார நோக்கே, நாட்டின் பொருளாதார நோக்காக மாறியது.
அது தவறு என்பது எம் அனைவருக்கும் தற்போது புரிகின்றது. பொருளாதார நோக்கு பற்றி பேச வேண்டுமாயின் பொருளாதாரம் பற்றி அறிந்த அமைச்சர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.






