புத்தளம் – மதுரங்குளி 10ஆம் கட்டை – கணமூலை விதியிலுள்ள ரயில் கடவையின் சமிஞ்சை விளக்குகள் பழுதடைந்தமையால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி ஊடாக பெருக்குவற்றான், சமீரகம, கணமூலை தெற்கு, கணமூலை வடக்கு, மந்தமான்தீவு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நாளாந்தம் அதிகளவிலானோர் போக்குவரத்து செய்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ரயில் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை விளக்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக சிவப்பு நிறத்தில் காணப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், அவ்வீதியூடாக போக்குவரத்து செய்யும் வாகன சாரதிகளும், பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில், சிறிது நேரம் தரித்து பின்னர் பயணிப்பதாக கூறுகின்றனர்.
எனவே, மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு, பழுதடைந்து தொடர்ச்சியாக சிவப்பு நிறத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சமிஞ்சை மின் விளக்குகளை திருத்திக் கொடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.