நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, இந்நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 எனும் தொலைபேசி எண்களுக்கு அழைப்பதன் மூலம் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களுக்குச் சென்றுள்ள மக்கள் பலர் வெறுங்கையுடனோ அல்லது மிகக்குறைந்த அத்தியாவசியப் பொருட்களுடனோ தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
பொரளையிலுள்ள வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில்,
ஒரு கிலோகிராம் அரிசியைத் தவிர நிவாரணப் பொதியில் எதுவும் இல்லை என்றும், தமக்கு 3 கிலோகிராம் சீனி தேவைப்பட்ட போதிலும் 2 கிலோகிராம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருட்களை காட்சிப்படுத்தும் அநேக இறாக்கைகள் வெறுமையாக இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ள மக்கள், சதொசவுக்குச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பால் மா மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அவை அப்பட்டமான பொய்கள் என நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சதொச வெறும் பெயருக்காகவே செயற்படுவதாகவும், எனினும் கறுப்புச் சந்தையில் பொருட்கள் இருப்பதாகவும் ஏமாற்றமடைந்த நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.






