குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று (06) புத்தளத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை கையளிக்கும் நோக்கில் நாடுபூராகவும் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராளிகள் பொதுமக்களிடமிருந்து ஒரு இலட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட விருதோடை மற்றும் கொத்தாந்திவு ஆகிய பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை (06) கையொப்பங்கள் பெறப்பட்டன.
இதன்போது பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மிகவும் ஆர்வதுடன் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கானோர் கையெழுத்துகளை இட்டனர்.
Advertisement
இவ்வாறு பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் ஒன்றுதிரட்டி உரிய கோரிக்கை அடங்கிய மகஜருடன் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.
அத்துடன், கொத்தாந்தீவு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஜூம்ஆத் தொழுகையை அடுத்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘தொலைபேசியில் பேசியது குற்றமா?’ , ‘அரசியல் பழிவாங்களை நிறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டை விடுதலை செய்’ என்று எழுதப்பட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஆஷிக், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது