ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் 30ஆம் திகதி அன்றைய தினத்தில் மாதம் தோறும் குறித்த போராட்டத்தை நாங்கள் செய்து வருகின்றோம். எங்களுடைய உறவுகள் வரும்வரை இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்.
எங்களுடைய உறவுகளை பிடித்து செல்லும்போது, 18, 19 வயதாக இருந்தது, இன்று 28, 30 வயதாகிவிட்டது.
இந்த நிலையில் பொருளாதார விலை உயர்வுகளால் எமது குடும்பங்கள் கஸ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
விலை உயர்ந்துகொண்டு போகின்ற நேரத்தில் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் உறவுகள், பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இராணுவமயப்படுத்தப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியிருக்கின்றார். ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்ட நிலையில்தான் இன்று எங்களுடைய பிள்ளைகளை தொலைத்து தெருவில் நிக்கின்றோம்.
ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார்களேயன்றி, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலேயே போகின்றது.
அவ்வாறு இராணுவமயமாக்கப்பட்டால் மேலும் எமது உறவுகளை இழப்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மங்களேஸ்வரி என்ற தாயார் குறிப்பிடுகையில்,
இளநீர் வாங்க சென்ற எனது பிள்ளை காயப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை எனது பிள்ளை தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. அந்த ஒரு பிள்ளை மாத்திரமே எனக்கு. இன்று நோய்வாய்ப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன்.
இராணுவ ஆட்சியில்தான் எமக்கு இவ்வளவும் நடந்தது. மேலும் இராணுவ ஆட்சியை கொண்டுவந்து முழு தமிழர்களையும் அழிப்பதற்கே திட்டம் செய்கின்றார்கள்.
எங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டாம். எமக்கு எங்கள் பிள்ளைகளை மாத்திரம் தந்தால் போதும் என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!