அதிபர் ஒருவர் இன்று ஊடகவியலாளர்களை பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என கூறியுள்ளார்.
தேசிய பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கூட்டம் நடைபெற்றது. அதற்காக ஊடகவியலாளர்கள் பிரதேச சபைக்கு சென்று பிரதேச சபையின் வளாகத்தில் நின்றனர்.
அவ்விடத்திற்கு வந்த குறித்த பாடசாலையின் அதிபர் ‘கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நின்றமை தொடர்பான செய்தி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் நீங்களா பிரசுரித்தீர்கள்’ எனக்கேட்டார்.
அதற்கு ஊடகவியலாளர்கள் குறித்த செய்தி தொடர்பான விபரங்கள் தேவைப்படின் அந்த ஊடக நிறுவனங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்.
இதையடுத்து, குறித்த அதிபர் ஊடகவியலாளர்களை நோக்கி ‘நீங்கள் புலனாய்வாளர்கள் போல் பாடசாலைக்குள் நுழைந்தீர்கள், நீங்கள் புலனாய்வாளர்களா? 8ஆம் வகுப்பு வரைக்கும்தான் கல்வி கற்றுள்ளீர்களா என தெரியவில்லை.’ எனக்கூறினார். இதன்போது அதிபர் தனது கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்தார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள், ‘வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தருகின்றோம், நீங்கள் இது தொடர்பாக அவரிடம் கூறுங்கள்’ எனக்கூறி தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயற்சித்தவேளை அதிபர் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக அவர் ஊடகவியலாளர்களுக்கு உறுதியளித்தார்.
சீனா, இந்தியாவுக்கு இடையில் நசுங்கப்போவது நாம் தான்! சி.வி விக்னேஸ்வரன்






