தும்பு உற்பத்திற்கு நிர்ணய விலையை கோரும் புத்தளம் மாவட்ட தும்பு தொழிற்சாலை உரிமையாளர்கள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தும்பு உற்பத்திக்கு நிர்ணய விலை மற்றும் முறையான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்டத்தில் உள்ள தும்புத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட மதுரங்குளி, விருதோடை, புழுதிவயல், கணமூலை, கடையாமோட்டை, நல்லாந்தொழுவ மற்றும் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் துப்புத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.

சுமார் 20 வருடங்களுக்கும் மேல் இந்த மக்கள் இந்த தொழிலை மேற்கொண்டு வருவதுடன், இங்கு சுமார் 200 இற்கும் மேற்பட்ட தும்புத் தொழிற்சாலைகள் காணப்படுவதாக தும்பு உற்பத்தியாளர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் தும்பு , தும்புச் சோறு மற்றும் தும்பு கழிவுத்தூள்கள் என்பன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமான், கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையின் தும்பு உற்பத்தி பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகிறது என இலங்கை தும்பு ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், குறித்த தும்பு ஏற்றுமதிக்கான நிர்ணய விலை ஒன்று இல்லாமை தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தும்பு உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னர் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தும்பு தற்போது குறைந்த விலைக்கு வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்வதால் தாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், தங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் சம்பளத்தை வழங்க முடியாத நிலையும் காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தாம் பெரிதும் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் தும்பு உற்பத்திக்கு, வெளிநாடுகளில் வாழ்வோர் விலைகளை நிர்ணயிக்கும் அவல நிலை காணப்படுவதாக மதுரங்குளி தும்பு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் கடன்களைப் பெற்று இந்த தும்புத் தொழிற்சாலைகளை முன்னெடுத்து வருவதால், அதிக இலாபம் கிடைக்காவிட்டாலும், கடன்களையாவது திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டவர்கள் கேட்கும் விலைக்கு, குறைந்த இலாபத்திற்கு தும்பு ஏற்றுமதி செய்வதாக மதுரங்குளி தும்பு ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தாங்கள் தொடர்ந்தும் கடனாளிகளாக மாறிக்கொண்டே செல்வதுடன், தங்களிடம் குறைந்த விலைக்கு தும்புகளை கொள்வனவு செய்து கூடிய விலைக்கு விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் கூடுதலாக பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் தும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் தும்புகளை கொள்வனவு செய்ய ஒரு நிறுவனம் ஒன்றை நிறுவுமாறும், சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அதற்கான நிர்ணய விலையையும் பெற்றுக் கொடுக்குமாறும் தும்பு உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *