மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டாக அமைய வேண்டுவதாக திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாடிகோராள புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில்
கடந்த இரண்டு வருட காலமாக நமது நாடு உட்பட உலகமே வைரஸுக்கு மத்தியில் காலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வைரஸ் தாக்கம் இன்றும் எமது நாடு உட்பட உலக நாடுகளிலும் காணப்படுகிறது. அதன் தாக்கத்தை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நாட்டினுடைய அபிவிருத்திக்கு முடியுமான பங்களிப்பை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.
நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதன் மூலம் நாட்டினுடைய மக்களாகிய நாங்கள் பலாபலன்களை பெற்றுக் கொள்ள கூடியதாக அமையும்.
திருகோணமலை மாவட்டத்தில் பல இனங்களைச் சேர்ந்த மக்களும் இணக்கமான முறையில் வாழ்கின்றார்கள். மாவட்டத்தில் கணிசமான இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.
பயன்பாடுன்றி காணப்படும் ஒவ்வொரு அங்குல காணியையையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி செயற்பாட்டை மேம்படுத்துவதன் மூலமாக நாட்டினுடைய அபிவிருத்திக்கு மாவட்ட அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய ஏதுவாக அமையும்.
கடந்தவருடம் திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு வகையான வேலைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
மக்களுடைய வாழ்வாதாரம், ஜீவனோபாயம் மற்றும் உற்பத்தி சார் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல மில்லியன் ரூபாய்க்கள் செலவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் நீண்ட கால மற்றும் குறுங்கால அடிப்படையில் பல்வேறு வகையான நன்மைகளை பெற்றுக் கொள்ள கூடியதாக அமையும்.
2022ஆம் ஆண்டு உற்பத்தி மற்றும் ஜீவனோபாய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு வகையான நிதி ஒதுக்கீடுகள் வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக அமையும் என்றும் அரச அதிபர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.






