கூட்டாட்சி தொடர்பில் சிந்தியுங்கள் என மோடியே கூறிய நிலையில், நாம் 13ஐ கோருவதா? சி.சிறிதரன் எம்.பி கேள்வி

கூட்டாட்சி தொடர்பில் சிந்தியுங்கள் என 6ஆண்டுகளிற்கு முன்பே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே கூறிய நிலையில், நாம் இன்றும் அந்த 13ஐ கோரப் போகின்றோமா என்ற பெரும் கேள்வியும் உள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமரிற்கு எழுதும் கடிதம் தொடர்பில் இன்று யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1987 இல் யாருக்காக ஒப்பந்தம் எழுதப்பட்டதோ அவர்களோடு போரிடுவதாகவே இறுதியில் அந்த ஒப்பந்தம் இருந்தது. அதனால் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தால் எமக்கு எந்த முன்னேற்றமும் கிடையாது.

இந்தியா எப்போதும் இலங்கையை பூகோள ரீதியில் கரிசனையாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இந்திய மாநில அதிகாரத்திற்கு மேலதிகமாக இருக்க கூடாது என்பதிலும் இந்தியா குறியாக இருக்கின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அடிப்படையில் சூழலில் வேறுபாடு உண்டு.

கூட்டாட்சி தொடர்பில் சிந்தியுங்கள் என 6ஆண்டுகளிற்கு முன்பே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே கூறிய நிலையில், நாம் இன்றும் அந்த 13ஐ கோரப் போகின்றோமா என்ற பெரும் கேள்வியும் உள்ளது.

ஜெயலலிதா நிறைவேற்றிய கண்டனத் தீர்மானத்தை குறைக்கும் வகையிலான ஓர் கோரிக்கையினையா நாம் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்ராலினிடம் முன்வைக்கப்போகின்றோம். இதனை ஏன் கட்சியில் இன்னும் விரிவாக பேசவில்லை.

அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான பார்வை இருந்திருக்க வேண்டும். அதற்கு தெளிவாக பயணிக்க வேண்டிய கூட்டமைப்பும் குழம்பியிருக்கின்றதோ என்ற எண்ணம் பலரிடம் தோன்றுகின்றது.

முதலில் எழுதிய கடிதத்தில் சமஸ்டி வடிவில் எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய பல விடயங்கள் இருந்தன.

ஆனால் தற்போது இரண்டாவதாக எழுதிய வரைபில் பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.

தேர்தலை நடாத்துமாறு கோர பாரதப் பிரதமரிற்கு கடிதம் எழுத வேண்டிய அவசியமோ நியாயமோ இல்லை. ஏனெனில் இந்த அரசு போன்று நாம் தேர்தலைக் கண்டு பயப்பிடவில்லை. தேர்தலிற்கு கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது. வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர். இந்த 13 கோருவதுதான் அந்த நல்ல விடயம்.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும்.

இதனால் வரைபு தொடர்ந்தும் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்பதே நிலைப்பாடு. நேற்றைய வரைபு எமது அபிலாசையினையோ தீர்வையோ கொண்டிருக்கவில்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன்.

ரவூவ் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தமிழர்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறு தீர்வை முன்வைப்பது.

எங்களுடைய கொள்கையோடு நில்லுங்கள் என நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது அதேபோல் தமது நிலைப்பாட்டுடன் ஒத்துபோக வேண்டும் என அவர்கள் எம்மை திணிக்க முடியாது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *