கல்முனை கடற்கரைப் பள்ளி 200 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

DCIM100MEDIADJI_0122.JPG

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

ஜனவரி 04ம் திகதி (நாளை ) ஆரம்பமாக உள்ள இவ் 200 ஆவது கொடியேற்ற விழாவினை இம் முறை சிறப்பாக நடாத்துவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதற்கமைய கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஆராயும் மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் ஆலோசனையின் பேரில், மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்காளான எம்.எஸ்.எம்.நிசார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோருடன் கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா என்பவற்றின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொடியேற்ற விழாவுக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக கல்முனை மாநகர சபையின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திண்மக்கழிவகற்றல், மின்னொளியூட்டல் மற்றும் பொது வசதிகள், அலங்கார ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்வதற்கும், கொடியேற்ற விழா நடைபெறுகின்ற 12 நாட்களும் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய திண்மக்கழிவகற்றல் மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் யாவும் இதன்போது பரிசீலிக்கப்பட்டு, அவற்றை சீராக நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழா நாளை செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் 200வது கொடியேற்று விழாவை முன்னிட்டு முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *