இந்த வருடமும் இந்தியாவில் இருந்து எடுத்து வரும் பொன்னி அரசியை தான் சாப்பிட நேரிடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவவில் நடந்த நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிவாயு நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்துடன், இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறும் வைத்தியர்கள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் இரசாயனத்தை பயன்படுத்தும் பொன்னிச் சம்பாவை உட்கொள்வதால் இந்நாட்டு மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
நான் இன்னும் எங்கும் கூச்சலிடவில்லை, மக்களுடன் இருப்பதால் இன்னும் கூச்சல் போடும் நிலைக்கு தள்ளப்படவில்லை. மக்களை நேசித்து, பணிவாக இருந்தால், யாரும் கூக்குரலிட மாட்டார்கள். அரசாங்கம் செய்த பல தவறுகள் உள்ளன.
உரப் பிரச்சினை, நல்ல விடயமொன்றை செய்யப் போய் தலைகீழாக முடிந்துள்ளன. இந்த வருடமும் இந்தியாவில் இருந்து எடுத்து வரும் பொன்னி அரசியை தான் சாப்பிட நேரிடும்.
எனவே இரசாயன உரங்கள் சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பது அப்பட்டமான பொய். நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன். அப்படி ஏதும் இல்லை.
எங்களுக்கு தண்ணீர் பிரச்சினை உள்ளது. காலையில் வயல்களுக்குச் சென்றால் மாலை வரை தண்ணீர் குடிக்காமல் காய்ந்து கிடக்கின்றனர்.
இது சிறுநீரகத்தை பாதிக்கிறது. நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அதிகளவு கல்சியம் உள்ளது. அதுவும் சிறுநீரகத்தையும் பாதிக்கிறது- என்றார்.