நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் வீசா ரத்து

நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பங்குபற்றும் நோக்கில் சேர்பிய வீரரான ஜொகோவிச் மெல்பர்ன் சென்றிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நீதிமன்றம் ஜொகோவிச்சின் வீசாவை ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

உலக டென்னிஸ் தர வரிசையில் முதலாம் நிலை வகிக்கும் ஜொகோவிச், கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையிலிருந்து தமக்கு மருத்துவ விலக்கு அளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஜொகோவிச் கோரியிருந்தார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றிருந்தார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமது மகனை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஐந்து மணித்தியாலங்கள் அறையில் தடுத்து வைத்திருப்பதாக ஜோகொவிச்சின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டால் சேர்பிய மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகோவிச் மருத்துவ விலக்கு அளிப்பதற்கான சான்றுகள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டாரா இல்லையா என்பது பற்றிய விபரங்களை ஜோகோவிச் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *