ராஜபக்ஷக்களை நம்பியோர் கதி என்ன? வடக்கிலும் தெற்கிலும் எதிர்ப்பலை!

அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம்மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

அத்தோடு, இலங்கைக்குள் டொலர்கள் உள்வருகின்ற மூலங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆளும் தரப்பினரின் பதவிகள் பறிப்புப் படலம் ஆரம்பித்துள்ளது.

ஜனவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என கடந்த டிசெம்பர் மாதம் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், இதுவரை சுசில் பிரேமஜயந்த மட்டுமே இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தைப் பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை நிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பட்டத்திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவக நிலையத்தின் தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த பட்டத்திருவிழாவை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா , கொரோனாவைக் காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ராஜபக்ஷ தரப்பின் உதவியை நாடிய அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ தரப்பினை நாடியதால் வடக்கில் இவ்வாறு இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, ராஜபக்ஷ தரப்பினை எதிர்த்ததால் சுசில் பிரேமஜயந்த , இராஜாங்க அமைச்சுப் பதவியை இழந்துள்ளார்.

அரசியல் , சமூக , கலாசார ரீதியில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்களுடன் தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்புக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டன.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 1,345 ரூபாவிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதுவொரு புறமிருக்க எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

டீசல் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின் நிலையமும் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபுகஸ்கந்த மின்நிலையத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேசிய மின் கட்டமைப்பில் 160 மெகா வோட் மின்சாரத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு கட்டாயம் தேவையான மற்றும் எம்மிடம் இல்லாத எரிபொருள், மருந்துப்பொருட்கள், கோதுமை மா போன்றவற்றை இறக்குமதி செய்ய டொலர்கள் தேவையாகும். அத்துடன் இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க, இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஏற்றுமதிகளுக்கான மூலப்பொருட்களைப் பெற டொலர் தேவையாகும்.

ஆனால் இலங்கைக்குள் டொலர்கள் உள்வருகின்ற மூலங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டுக்கான பயணம் ஆரம்பமாகின்றது. 2021 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் கடுமையான பொருளாதார நெருக்கடி டொலர் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடிய நிலையில் 2022 ஆம் ஆண்டிலும் அந்த பிரச்சினைகளின் நீடிப்புடனேயே பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இலங்கையின் டொலர் வருமானம் மற்றும் பொருளாதார குறிகாட்டிகளை பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கவில்லை அதேபோன்று 2022 ஆம் ஆண்டிலும் பல்வேறு சவால்கள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் டொலர் பொருளாதாரத்தில் காணப்படுகின்றன. அவற்றை எதிர்கொண்டு இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதிலேயே வெற்றி தங்கியிருக்கின்றது.

இலங்கையில் டொலர் பற்றாக்குறை என்பதே தற்போதைய சூழலில் நாடு முழுவதும் பலர் மத்தியிலும் பேசப்பட்டு கொண்டிருக்கின்ற மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது. இன்றைய சூழலில் அரசியல் களத்திலும் அரசியல் காய்நகர்த்தல்கள், நகர்வுகள் பற்றி பேசுவதற்கு பதிலாக டொலர் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தே பேசப்படுகின்றது.

டொலர் நெருக்கடி காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் கோதுமை மா உட்பட உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதிலும் பாரியதொரு நெருக்கடி காணப்படுகின்றது.

அதனால் நாட்டில் இறக்குமதி பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு ஒரு பில்லியன் அளவுக்கு குறைந்த நிலையில் கடந்த புதன்கிழமை மீண்டும் வெளிநாட்டுக் கையிருப்பு 3.1 பில்லியன்களாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.

இத்தகைய நிலையில் மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலையை அறிவிக்க நேரிடும் என பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். சிலரின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் அரசியல் நெருக்கடி மறுபுறம் சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *