
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த பதவி நீக்கப்பட்ட பின்னர், அமைச்சரவையில் உள்ள ஏனைய மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அந்த அதிருப்தியை தனது கல்வி அமைச்சில் வைத்து செய்தியாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்.
கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த பதவி விலக்கப்பட்டமை தொடர்பாகச் செய்தியாளர்கள் சிலர் கேள்வி தொடத்தபோது பதிலளிக்க மறுத்த தினேஸ் குணவர்த்தன, ஆவேசமாகக் காணப்பட்டார்.
சுசில் பிரேம ஜயந்த தினேஸ் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர். அதேவேளை, வேறு பல மூத்த அமைச்சர்கள நேரில் சென்று சுசில் பிரேமஜயந்தவுடன் உரையாடினர்.பதவி நீக்கம் குறித்துக் கவலையடைவதாக அமைச்சர் டளஸ் அழகபெருமாள் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, சிலிண்டர் வெடிப்புகள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களின் வில அதிகரிப்புக் குறித்து மக்கள் வீதியில் வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தையும் கண்டித்து விமர்சித்திருந்தார். இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னணியில் ஏற்கனவே முரண்பட்டுக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ச, உதயம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் பதவி நீக்கப்படுவார்களா அல்லது சுசில் பிரேமஜயந்தவின் திடீர் பதவி நீக்கம் முரண்படும் அமைச்சர்களுக்கான எச்சரிக்கையா என்பது குறித்த சந்தேகங்கள் சிங்கள சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்படுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீட்கும் நோக்கில் சர்வதேச தொண்டு நிறுவங்களோடு ரணில் விக்கிரமசிங்க தொடர்பு கொண்டு பேசவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.