வீதிகளில் அந்தரித்த பாடசாலை மாணவர்கள்..! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை! samugammedia

பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமை சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளரால் மாகாணத்தில் இயங்கும் முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

‘பேருந்துகள் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது சொந்த பிரேரணை அடிப்டையில் விசாரணைகளை ஆரம்பித்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்நது.

அதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரினால் உரிய நடவடிக்கை எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எனவே பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவு நேரங்களில் செயலாற்றும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏற்றியிறக்குமாறு பேருந்து குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் இடத்து சம்பந்தப்பட்ட பேரூந்து குழுவிற்கு எதிராக சபை விதிமுறைகளின்படி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை போக்குவரத்துச் சபையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *