ரணிலின் ஆட்சியில் ஓரிரு வருடங்களில் நாடு மீண்டெழும்– அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!samugammedia

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சகலருக்கும் சமமான கல்வி எனும் சிந்தனைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதிலும் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று (29.03.2023) முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாணவர்களுக்கான சீருடைகளையும் பாடநூல்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இந்த தேசிய நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இதற்கு காரணமாக இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இப்பாடசாலையின் முன்னேற்றங்கள், நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாக அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முன்வைத்திருக்கிறார்கள். இந்த குறைகளை ஏற்று அவற்றை நிவர்த்தி செய்ய ஆவண செய்வதுடன் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள், கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் டிப்ளோமாதாரிகள் மூலம் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆம்பத்தில் மாணவிகள் தமிழில் தேசிய கீதம் பாடினார்கள். நாட்டின் சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திடமான தீர்மானங்களின் பயனாக சுதந்திரதினம் போன்ற தேசிய நிகழ்வுகளிலும் தமிழ் மொழியிலும் பாடப்பட்டது.

தேசிய கீதத்தில் சொல்லப்பட்டுள்ள தேசிய ரீதியான சிந்தனைகளை உள்வாங்கி மனப்பாடம் செய்து பாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *