குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் நேரடியாக வருகை தறுமாறு நீதிமன்றில் கோரிக்கை..!மன்றில் முன்னிலையாகாத பொலிஸார்.! samugammedia

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் கடந்த 2ஆம் திகதி நீதிமன்றில் மன்றில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது.

இந்நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய குறித்த வழக்கானது இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலீசாரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.  
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது தமது சிரேஸ்ர சட்டத்தரணிகளும், சிரேஸ்ர அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால், தமது விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலீசாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடு என, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய
கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமெனவும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வேண்டுகேளும் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் இருதரப்பு சமர்ப்பணங்களைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலீசார் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வழக்குத் திகதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *