துட்டகைமுனு போன்று தன்னைக் காட்டிக்கொள்ள முற்படும் ரணில்-கஜேந்திரன் காட்டம்!samugammedia

ரணில் விக்கிரமசிங்க நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதுடன் தமிழ் தேசத்திற்கெதிராக செயற்படுவதாகவும், தொல்பொருள் திணைக்களம் திட்டமிட்டு தமிழர்களின் வரலாற்று சின்னங்களை பௌத்த மயமாக்கி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாவில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர்  ஊடகங்களிற்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

தொல்பொருள் திணைக்களத்தின் இனவாத நடவடிக்கைகளிற்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்திற்கு  முன்பாகவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தமது கண்டனங்களை வெளிப்படுத்தினார்கள் எனவும் தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களமானது திட்டமிட்டு தமிழர்களின் தாயகப்  பகுதியில் காணப்படும்  தமிழர்களின் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்வதாக பொய்யாக பௌத்த வரலாறாக எழுதுவது தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

அவ்வகையில், கடந்த பல வருடங்களாக சைவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெடுக்குநாறி மலையிலுள்ள  ஆதிசிவன் வழிபாட்டை தடுத்து அதனை பௌத்த மயமாக்க பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு அவ் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்யுமளவிற்கு பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தினை தவறாக வழிநடாத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் பொலிசாரும் அவர்களுடன் இணைந்து வெறியாட்டம் ஆடுவதாகவும் அதன் உச்ச கட்டமே கடந்த வாரம் வெடுக்குநாறி மலையின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி யாரும் நுழைய முடியாதவாறு வனப்பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அட்டுழியங்கள் இருக்கும் பட்சத்தில் வேறு யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் மீதே அதிக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக உடைத்தவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விக்கிரகங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

சிங்கள மயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் காரணத்தினால் சர்வதேச ரீதியில் வரக்கூடிய எந்த அச்சங்களுமின்றி அரசாங்கம் செயற்படுகின்றது.

2022 ஆம் ஆண்டில் கோட்ட மற்றும் மஹிந்த அரசாங்கம் நாட்டினை கொள்ளையடித்த குற்றத்திற்காக சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நாடு வங்குரோத்து நிலையில் வீழ்ந்த சூழலில் நாட்டினை மீட்டெடுக்க சர்வதேச சமூகத்திடமிருந்து நிதியினை பெற கண்ணை மூடியவாறு தமிழ் தரப்புக்கள் ஆதரவு நல்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் ரணில் விக்கிரமசிங்க  நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையுடன் தமிழ் தேசத்திற்கெதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்தி துட்டகைமுனு மற்றும் மஹிந்த, கோட்டாவினை விஞ்சிய சிங்கள பௌத்த தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ளவே வடக்கு கிழக்கில் சிங்கள மயப்படுத்தலில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் விரலினால் கண்களை குத்துவதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

ஜெனீவாவிற்கு சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் எனவும் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இருப்பதாக இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதுடன் பலப்படுத்தி விட்டு பின்னர் போராட்டங்களில் முன் நிற்பதில் விடுதலை கிடைக்க மாட்டாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply