சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்! samugammedia

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இன்று காலை மாவட்ட செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.

இதன்போது மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தினை அமைப்பதற்காக, விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக்கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடாத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தி, காணி தொடர்பான தமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில், பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்ககூடியதாக இருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *