நெடுந்தீவில் கொடூரக் கொலைகள்- வெளியாகும் பின்னணி – எழுந்துள்ள பலத்த சந்தேகம்.! samugammedia

1985 ஆம் ஆண்டு நெடுந்தீவு கடற்பரப்பில் குமுதினி படகில் பயணித்த போது இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியே நேற்றிரவு நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பெண் உரிமையாளின் கணவர் 1985 ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் இறந்தவர் என்றும் ஆண்டு தோறும் இந்த பெண்ணே முன்நின்று படுகொலை நினைவேந்தனை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இன்று நடைபெற்ற கோரப்படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடாத்தப்படவேண்டுமென்று தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை அண்மித்தவாறு அமைந்துள்ள  வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டின் உரிமையாளரான பெண்ணின் கணவர் 1985 ல் சிறீலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குமுதினி படகு படுகொலையில் கொல்லப்பட்டவர் ஆவார்.

வருடாந்தம் நாங்கள் நெடுந்தீவு மாவிலி இறங்குறையில் முன்னெடுக்கின்ற குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளில் குறித்த பெண்மணி தவறாது கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு தனிநாயகம் அடிகளாரின் ஞாபகார்த்த சிலையின் பின்புறமாகவும்  நெடுந்தீவின் பிரதான கடற்படை முகாமாகிய வசப முகாமின் எதிர்ப்பக்கமாவும் இவ்வீடு அமைந்திருக்கின்றது.
கடற்படைமுகாமுக்கும் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கும் சில மீற்றர் இடைவெளியே காணப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான கடற்படையினர் காணப்படுகின்ற இந்த முகாமின் முன்னாலுள்ள வீட்டின் மீது இவ்வாறான தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்செல்வதென்பது எண்ணிப்பார்க்கமுடியாத சம்பவமே.சாதாரணமாக நெடுந்தீவுக்குள் நுழையும்போதே ஆள் அடையாள அட்டை பதிவு செய்தல், குறுக்கு விசாரணைகள்  போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துவருகின்ற நிலையில்  இவ்வாறான கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு இலகுவாக  தப்பிச்செல்லமுடியுமெனின் பாரியதொகையிலான மக்களின்  வரிப்பணத்தில் அந்த முகாம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *