புதிய பயங்கரவாத சட்ட மூலத்தை எதிர்த்தே ஆக வேண்டும் – தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவி மிதிலைச்செல்வி! samugammedia

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பச் சட்டமூலத்தை நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் எதிர்த்தே ஆக வேண்டும் என தமிழரசு கட்சியின் கொழும்புக்கு கிளை உப தலைவர் மிதிலைச் செல்வி சிறீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றையதினம் சனிக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வின் தலைமை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டம்  அப்பாவி தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டு வந்த ஆபத்தான சட்டம்.

 அதைவிட தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அதைவிட பாரதூரமான விடயங்களை உள்ளடக்கியதான சட்ட மூலமாக அறிகிறோம்.

குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பு கருத்துக்களும் வலுப் பெற்றுக் காணப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டம் தமிழ் மக்களையே அதிகம் பாதித்துள்ள நிலையில் தற்போது தென்னிலங்கை மக்களும் அதன் பாதிப்புகளை உணரத் தொடங்கியுள்ளனர்.

தென் இலங்கை பெரும்பான்மை இன மக்கள் பயங்கரவாத சட்டம் வேண்டாம்  புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வேண்டாம் என போராடிவரும் நிலையில் சிறுபான்மை இனத்தவர்களின் பங்களிப்பும் அவசியம்.

ஏனெனில் 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் குறித்த சட்டம் இருந்து என்ன இல்லாவிட்டால் என்ன என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆகவே பயங்கரவாத சட்டத்தின் ஆபத்துக்களை தென்னிலங்கை பெரும்பான்மை சமூகம் உணரத் தொடங்கியுள்ள நிலையில் ஒற்றுமையுடன் ஓரணியில் சகல இன மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசு கட்சியின்  தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ,தமிழரசு கட்சியினுடைய முன்னாள் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி சசிகலா இரவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply