தலைமன்னாரில் ஆரம்பமான மலையக எழுச்சி பயணத்தின் நடைபயணம் நாளை மன்னார் நகரை நோக்கி ஆரம்பம்! samugammedia

மலையக எழுச்சி பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (29) தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வெற்றி நாயகி தேவாலயத்தை சென்றடைந்து நிறைவுற்றது. மூன்றாவது (3) நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (30) மன்னார் நகரை நோக்கி செல்லவுள்ள பேரணியில் அனைவரும் பங்கேற்குமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ வேண்டும்  என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு  ஆரம்பமானது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று (29)  சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான  மலையக மக்கள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதி நிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்கள் என சுமார் 800 பேரின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை, அத் தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு, அதனைத் தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றன.

அதன் பின்னர், பி.ப 3 மணியளவில் பேசாலை முருகன் கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள், அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் வாழும் மக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.


இக் கலந்துரையாடல் நிகழ்வில் ‘மலையக எழுச்சிப் பயணம்’ ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான காரணம், மலையக மக்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் பின்னணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில், மூன்றாம் நாளான நாளை  ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகும் நடைபயணம், மன்னார் நகர் வரை சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *