இலங்கையில் இந்தியாவின் சமீபத்திய நகர்வுகள், தெற்காசியாவில் செல்வாக்கையும் இருப்பையும் உயர்த்துவதற்கான ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையின்மை, இலங்கை மக்களுக்குப் பயனளிக்காத ‘ஒருதலைபட்சமான ஒப்பந்தங்களுக்கு’ ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், சீனாவின் பெருகிவரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்காகப் பிராந்தியத்தில் அதிக மூலோபாய செல்வாக்கிற்குப் புதுடெல்லியின் உந்துதலின் மத்தியில் இலங்கையும் இந்தியாவும் தங்கள் நீண்டகால உறவுகளை ஆற்றல் மற்றும் கடல்சார் ஒப்பந்தங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ள, இலங்கையின் சுதந்திர அரசியல் மற்றும் எரிசக்தி ஆய்வாளர் அருண குலதுங்க,
குறிப்பாக சீனாவால் நடத்தப்படும் மூன்று துறைமுகங்களான பங்களாதேசிலுள்ள சிட்டகொங் (Chattogram), இலங்கையின் அம்பாந்தோட்டை மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடர் ஆகியன இந்தியாவைச் சூழ்ந்துள்ள மரணத்தின் முக்கோணமாகும்.
இது இந்தியாவின் கழுத்தை நெரிப்பது போன்றது.
இதுவே கொழும்புடன் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான டெல்லியின் நகர்வுக்குக் காரணமாகும் என்றும் குலதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகின் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வலியுறுத்துவதும் இதன்பொருட்டேயாகும்.
அரசியல் மற்றும் வணிக உயரடுக்கின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒப்பந்தங்கள் உள்ளூர் சமூகங்களின் தேவைகளை மோசமாகப் பாதிக்கலாம் என ஆய்வாளர் குலதுங்க எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல்-விஞ்ஞான ஆய்வாளர் ரஜ்னி கமகே தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், நடைமுறையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அதிகார சமநிலையின்மை தொடர்பில், இந்த முன்முயற்சிகளின்போது கொழும்பு பேச்சுவார்த்தையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருதலைபட்சமான ஒப்பந்தங்களைத் தள்ளுவதற்கு ‘நெருக்கடி’ என்ற மொழியைப் பயன்படுத்தலாம்’ என்றும் கமகே கூறியுள்ளார்.