தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடி- பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நால்வர்- பொலிஸாரிடம் இருந்து தப்பியோட்டம்! samugammedia

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சகோதர மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் நான்கு பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட கிச்சிராபும், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த இருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீனவர்களிடம் குறித்த சம்பவம் தொடர்பிலான முழு விபரத்தை கேட்டறிந்ததோடு குறித்த சம்பவத்தை உடனடியாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடியால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை அவ்வப்போது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *