அமைச்சர்கள் நன்னீர் மீன்பிடி சங்கத்தை கவனிப்பதில்லை! குற்றம்சுமத்தும் மீனவர் samugammedia

அமைச்சர்கள் நன்னீர் மீன்பிடி சங்கத்தை கவனிப்பதில்லை. அட்டை, இறால் , மீன் வளர்ப்பவர்களுக்கு அனுமதியை கொடுத்து தமிழ், முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதே அமைச்சரின் யோசனை என நன்னீர் மீன்பிடி மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குமுழமுனை தண்ணிமுறிப்பு மீனவர் சங்கம், ஹிச்சிராபுரம் மீனவர் சங்கமாக இரு சங்கங்கள் இணைந்து தமிழ், முஸ்லீம் மக்களாக ஒற்றுமையாக தொழிலை செய்து வருகின்றோம். 

விலைக்கு மீன்குஞ்சுகளை வேண்டி வளர்த்து அதனையே அறுவடை செய்து வருகின்றோம். பெரும்பான்மையின மக்கள் சட்டவிரோதமாக வந்து மீன்பிடிப்பதை இரு சங்கத்தினரும் சேர்ந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வந்து தொழிலில் ஈடுபட்டவேளை 38 பேரினை மாத்திரமே பிடித்து ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தோம். 

மீன்பிடிக்க வந்தவர்களில் வனஜீவராசிகள் திணைக்களத்தினை சேர்ந்த மூவர். அவர்களையும் விட்டுட்டார்கள். கைது செய்தவர்கள் பொலிஸின் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்ட போது 9 பேர் தப்பிக்க பொலிஸாரே காரணம். தம் இனம் என்று விட்டாரோ?, அல்லது இலஞ்சம் வேண்டி விட்டாரோ? என தோன்றுகிறது. 

நாங்கள் அவர்களை தேடி செல்லவில்லை. அவர்களே எங்களை தேடி வந்தார்கள். எங்களுடைய சங்கத்தை சேர்ந்த அப்பாவி மீனவர்கள் தொழில் உடையுடன் கைது செய்திருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்க கூட விடவில்லை. 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை பெரும்பான்மையினர்  இவ்வாறே நடக்கிறார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முக்கியமாக தெரிய வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நன்னீர் மீன்பிடி சங்கத்தை கவனிப்பதில்லை. அவர்கள் அட்டை வளர்ப்பவர்களுக்கும், இறால், மீன் வளர்ப்பவர்களுக்கும் அங்கங்கு அனுமதியை கொடுத்து இங்குள்ள தமிழ், முஸ்லீம் மக்களை ஒன்றுமே சாப்பிடாதளவிற்கு செய்வதே அமைச்சரின் யோசனை. 

அரசியலில் அவர்கள் இலாபத்தை தேடிக்கொள்கிறார்கள். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அனுமதியை கொடுத்து இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது அவர்கள் தான் இதனை சிந்திக்க வேண்டும்.

இரண்டு சமூகமும் இந்த வாழ்வாதாரத்தை நம்பியே இருக்கின்றோம். இதற்கு அரச அதிபர், அரச அதிகாரிகள், அமைச்சர்கள் ஒன்று கூடி நல்லதொரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும். தண்ணிமுறிப்பு குளத்தினை உயிர் இருக்கும்வரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *