அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி வெகுவிரைவில் தோற்றம் பெறும்! – எச்சரிக்கும் ஜி.எல்.பீரிஸ் samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது. வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

சுங்க திணைக்களம், மதுவரி திணைக்களம், மோட்டார் வாகன பதிவாளர் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை குறைந்தபட்சமேனும் நிவர்த்தி செய்துக் கொண்டால் நாட்டு மக்கள் மீது வரி சுமையை சுமத்த வேண்டிய தேவை ஏதுமில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன  குறிப்பிடுகிறார்.

ஊழல் மோசடியை இல்லாதொழிக்க நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்கள் மீது வரி விதிப்பு மனசாட்சி இல்லாமல் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் உடவளவ வலய விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகள் வீழ்ச்சியடைந்தால் அதன் தாக்கத்தை ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்கிறார்கள். சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய வலயத்துக்கு நீர் விடுவிக்காதது தவறு என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் தான் விவசாயத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், நீர்பாசனத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் உள்ளார்கள்.

ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய மூன்று அமைச்சுக்களும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. இறுதியில் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது. வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும்.

மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படும்வரை ஆளுநர்களுக்கு ஆலோசனைகளை வழங்க, ஆலோசனைசபையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

ஆளுநர்களுக்கு அறிவுரை வழங்க ஆலோசனை சபையை நிறுவுவதைவிட, மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை முதலில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர்கூட, ஒன்பது மாகாணங்களுக்கும் இன்று இல்லை.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

எனவே, மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் முன்கூட்டியே நடத்த மாட்டார்கள். எனினும் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இன்னும் 365 நாட்களில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அத்தோடு, தேர்தலை பிற்போடும் மக்கள் ஆணைக்கூட இந்த அரசாங்கத்திற்கு கிடையாது.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேச முன்னர் மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *