ஜனாதிபதியின் அழுத்தத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரிவினைவாதம் வடக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றதால் ஏனைய மாகாணங்களைக் காட்டிலும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டைப் பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 85 சதவீதமானவை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு காணப்படுகிறதே தவிர அந்தப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கல்ல, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமை அகற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அந்தப் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.